விளையாட்டு

ஐசிசி 2021-இன் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கான ரேஸில் அஷ்வின்

ஐசிசி 2021-இன் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கான ரேஸில் அஷ்வின்

EllusamyKarthik

நடப்பு ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வழங்க உள்ளது. இந்த விருதை வெல்வதற்கான பரிந்துரைக்கப்பட்டுள்ள நான்கு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெற்றுள்ளார். நடப்பு ஆண்டில் இந்த விருதை வெல்ல இந்திய அணி சார்பில் இடம் பிடித்துள்ள ஒரே வீரரும் அஷ்வின்தான். 

நடப்பு ஆண்டில் மட்டுமே 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஷ்வின் 337 ரன்களை எடுத்துள்ளார். இதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு சதம் பதிவு செய்துள்ளார். அதேபோல சிட்னி மைதானத்தில் ஹனுமா விஹாரியுடன் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்திருந்தார். அந்த போட்டியில் 128 பந்துகளுக்கு வெறும் 39 ரன்களை அஷ்வின் எடுத்திருந்தார். 

அதே போல பந்து வீச்சில் 52 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சுமார் 365 ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 78 ஓவர்கள் மெய்டன். மூன்று முறை 5 விக்கெட்டுகளுக்கும் கூடுதலான விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அவரது பவுலிங் எகானமி 2.31 என உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு போட்டியில் கூட அஷ்வின் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அஷ்வின் மட்டுமல்லாது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் மற்றும் இலங்கை அணியின் கேப்டன் Dimuth கருணரத்னே ஆகியோரும் இந்த விருதுக்கான பரிந்துரையில் உள்ளனர்.