விளையாட்டு

IND vs WI: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா! பிரசித் கிருஷ்ணா அசத்தல் பந்து வீச்சு!

EllusamyKarthik

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ரோகித் ஷர்மா தலைமையிலான அணி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த தொடரை விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி சுலபமாக வெற்றி பெற்றிருந்தது. இதில் இந்திய அணியின் பவுலர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அதே போல இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 237 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் அதிகபட்சமாக 64 ரன்களை எடுத்திருந்தார். இந்த தொடரில் மொத்தம் அவர் 98 ரன்களை எடுத்துள்ளார். முதல் போட்டியில் அவர் நாட்-அவுட் பேட்ஸ்மேனாக பெவிலியன் திரும்பியிருந்தார். அதோடு சூர்யகுமார் யாதவ் தனது முதல் ஆறு ஒருநாள் இன்னிங்ஸில் 30+ ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.  

நிலைத்து நின்று விளையாடிய கே.எல். ராகுல் 49 ரன்களில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார். இரண்டு ரன்கள் எடுக்க முயற்சி செய்து முதல் ரன்னை வெற்றிகரமாக எடுத்த அவரால் இரண்டாவது ரன்னை எடுக்க முடியவில்லை. அதனால் சூர்யகுமார் யாதவுடனான அவரது பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. இருவரும் 66 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்திருந்தது. இது Below Par ஸ்கோராக இருந்தது. இந்த இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி சுலபமாக சேஸ் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால், இந்திய பவுலர் பிரசித் கிருஷ்ணா முதலாவது பவர் பிளேவில் அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் இந்தியாவுக்கு கம்பேக் கொடுத்தார். அதோடு 20-வது ஓவரில் பூரன் விக்கெட்டை அவர் கைப்பற்றி அசத்தினார். இங்கு ஆட்டம் அப்படியே இந்தியாவுக்கு சாதகமாக திரும்பி இருந்தது. இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி மொத்தம் ஆறு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளனர். 

இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ரூக்ஸ் பொறுப்புடன் விளையாடினார். 44 ரன்கள் சேர்த்து அவர் ஆட்டமிழந்தார். பின்னர் அந்த அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் முடிந்தவரை போராடி பார்த்தனர். இறுதியாக 46 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களை எடுத்தது. அதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கடைசி விக்கெட்டை கைப்பற்றி வெற்றியை உறுதி செய்ததும் பிரசித் தான். பிரசித் கிருஷ்ணா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.