இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை குவித்திருந்தது. தவான், கோலி, ராகுல் மற்றும் குருணால் பாண்ட்யா அரை சதம் கடந்து அசத்தி இருந்தனர்.
தொடர்ந்து 318 ரன்களை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இந்நிலையில் அவர்களது வலுவான பார்ட்னர்ஷிப்பை தகர்த்தார் அறிமுக வீரர் பிரசீத் கிருஷ்ணா.
அதன்பின்னர் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, மோர்கன், பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, சாம் கரண், அடில் ரஷீத் என பேட்ஸ்மேன்கள் கிரீசுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர்.
இந்திய அணிக்காக பிரசீத் கிருஷ்ணா 4 விக்கெட், தாக்கூர் 3 விக்கெட், புவனேஸ்வர் 2 விக்கெட் மற்றும் குருணால் பாண்ட்யா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். அதன் மூலம் இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த ஒருநாள் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன.
இந்த வெற்றியில் இந்திய அணிக்காக அறிமுக வீரர்கள் குருணால் பாண்ட்யா பேட்டிங்கிலும், பிரசீத் கிருஷ்ணா பந்து வீச்சிலும் அசத்தி இருந்தனர்.