இந்திய கிரிக்கெட் அணி வரும் வியாழன் அன்று (7.01.2021) சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியை காண இருபதாயிரம் பார்வையளர்களுக்கு அனுமதி கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மைதானத்தில் விளையாடி முடித்த பிறகு நட்சத்திர விடுதியிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் தாங்கள் என்ன மிருகக்காட்சிசாலையில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளா? இருபதாயிரம் பார்வையளர்களுக்கு அனுமதி கொடுக்கும் போது நாங்கள் ஏன் ஹோட்டலுக்குள்ளேய அடைபட்டிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
“கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலிய அரசு சொல்லும் அனைத்தையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம். கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேலாக இங்கு பயோ பபூளில் தான் இருக்கிறோம். அரசாங்கம் சொல்வது போல மாஸ்க் அணிந்து கொண்டு அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றி வருகிறோம். இந்நிலையில் சிட்னி மைதானத்தில் இருபதாயிரம் பார்வையாளர்களை அனுமதிக்கும் போது நாங்கள் மட்டும் ஏன் விடுதியில் அடைபட்டிருக்க வேண்டும். ஆஸ்திரேலிய மக்களை போல நாங்களும் மாஸ்க் அணிந்து கொண்டு சகஜமாக இருக்கலாமே. அப்படி இல்லாமல் எங்களை ஹோட்டலில் தங்க சொல்லி நிர்பந்திப்பது முற்றிலும் முரண்பாடானது. ஒருவேளை பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவிலை என்றால் கூட அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்” என இந்திய அணி வட்டாரத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் பலர் கடந்த 6 மாத காலமாக பயோ பபூளில் இருப்பதாகவும். சிராஜ் அவரது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட செல்லாமல் ஆஸ்திரேலியாவில் தங்கி அந்த நாட்டின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே கிரிக்கெட் விளையாடி வருதாகவும் இந்திய அணி குறிப்பிட்டுள்ளது. மேலும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அணியில் உள்ள யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பதையும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.