விளையாட்டு

18 பந்துகளில் அரைசதம் விளாசிய கே.எல்.ராகுல்: 6.3 ஓவரில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா

EllusamyKarthik

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஸ்காட்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை எடுத்திருந்தது. 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. 

ரோகித் மற்றும் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் 30 ரன்களை சேர்த்து அவுட்டானார். ராகுல் 18 பந்துகளில் அரைசதம் விளாசி இருந்தார். பவர் பிளேயில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை எடுத்தது. 

வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் சூர்யகுமார் யாதவ். 6.3 ஓவர்களில் இந்தியா 89 ரன்களை குவித்தது. 

இந்தியா இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இருந்தாலும் மற்ற அணிகளின் வெற்றி மற்றும் தோல்வியை பொறுத்தே அது அமையும். நியூசிலாந்து (1.277), ஆப்கானிஸ்தான் அணியை (1.481) காட்டிலும் தற்போது இந்திய அணி (1.619) அதிக ரன் ரேட் வைத்துள்ளது.

வரும் திங்கள் அன்று இந்தியா, நமீபியாவை எதிர்கொள்கிறது. நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்தியாவுக்கு அது கடைசி போட்டியாகும்.