விளையாட்டு

சஞ்சனாவை மணமுடித்து தமிழகத்து மருமகனானார் பும்ரா!

jagadeesh

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மணந்து தமிழகத்தின் மருமகனானார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. தனிப்பட்ட காரணங்களால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டுக்குப் பிறகு பும்ரா இந்திய அணியில் இருந்து விடுப்பு எடுத்தார். மார்ச் 12 முதல் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கும் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை. பும்ரா திடீரென விடுப்பு எடுத்து குறித்து சில தகவல்கள் சுற்றி வருகின்றன. அதில் அவர் திருமணமும் அடங்கும்.

அதுவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சஞ்சனா கணேசனை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்ற செய்தி பரவியது.

இந்நிலையில், ஜஸ்ப்ரீத் பும்ரா - சஞ்சனா கணேசன் ஜோடிக்கு இன்று கோவாவில் திருமணம் முடிந்துள்ளது. பிங்க் நிற உடையில் மணமகன் - மணமகள் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் அவ்வளவு அழகாக இருக்கிறது. இப்போது பும்ரா - சஞ்சனா தம்பதியனருக்கு இந்நாள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த சஞ்சனா?

28 வயதான சஞ்சனா கணேசன் ஒரு தமிழ்ப் பெண். இவரின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். ஆனால், தற்போது இருப்பது எல்லாம் மகாராஷ்டிராவின் புனேவில்தான். விளையாட்டு தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக உள்ளார் சஞ்சனா. ஐபிஎல் போட்டிகளுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிரபலமான ரியாலிட்டி ஷோவான எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா 7 மூலம் சஞ்சனா கணேசன் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இருப்பினும், காயம் காரணமாக அவர் நிகழ்ச்சியிலிருந்து விலக வேண்டியிருந்தது.

இதேபோல் 'தி நைட் கிளப்' என்று பெயரிடப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணிக்காக சஞ்சனா கணேசன் பிரத்யேக நிகழ்ச்சிகளை வழங்கினார், அங்கு கே.கே.ஆர் ரசிகர்கள் அணியைப் பற்றி பேசவும் பேசவும் வாய்ப்பு கிடைக்கிறது.

கே.கே.ஆர் இணை உரிமையாளர் ஷாருக்கானும் இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். தொகுப்பாளராக இருப்பதற்கு முன்பாக சஞ்சனா கணேசன் மாடலிங் செய்து வந்தார். '2012 ஃபெமினா ஸ்டைல் திவா' பேஷன் ஷோவில் பங்கேற்றிருக்கிறார். 2013 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா புனே போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். அதேபோல் 2014 மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.