ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவதுப் போட்டியில் இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்களை எடுத்தது. அந்த அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மார்னஸ் லபுஷானே மற்றும் கிளென் மேக்ஸ்வெல் என நால்வரும் அரை சதமடித்தனர். ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
இரு அணிகளுக்கு எதிரான முதல் போட்டியிலும் ஸ்டீவ் ஸ்மித் 62 பந்துகளில் சதமடித்தார். கடந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 374 ரன்கள் அடித்தது. இப்போது இன்றையப் போட்டியிலும் 389 ரன்களை குவித்துள்ளது. இந்தப் போட்டியிலும் இந்திய பவுலர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினர். இந்தப் போட்டியிலும் ஒரு பவுலர் கூட எகானமியாக பந்துவீசவில்லை.
அதிகபட்சமாக பும்ரா 10 ஓவர் வீசி 79 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் இந்தியா 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. முகமது ஷமி 9 ஓவர் வீசி 73 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதில் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி மிக மோசமாக பந்துவீசினார். அவர் 7 ஓவர்கள் வீசி 70 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதேபோல சஹால் 9 ஓவர்கள் வீசி 71 ரன்களும் கொடுத்தார்.
இதில் ஓரளவுக்கு ரவீந்திர ஜடேஜா 10 ஓவர் வீசி 60 ரன்களை விட்டுக்கொடுத்தார். பேட்ஸ்மேனான மயாங்க் அகர்வால் 1 ஓவர் வீசி 10 ரன்கள் கொடுத்தார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின்பு பந்துவீசி ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர் வீசி 24 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.