விளையாட்டு

இந்திய பந்துவீச்சாளர் சிராஜை சீண்டிய பார்வையாளர்கள்... மைதானத்தில் நடந்தது என்ன?

இந்திய பந்துவீச்சாளர் சிராஜை சீண்டிய பார்வையாளர்கள்... மைதானத்தில் நடந்தது என்ன?

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. சிட்னி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற 407 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.  இந்நிலையில் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் பணியை கவனித்து வந்த இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜை இனவெறி ரீதியாக சீண்டியுள்ளனர் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள்.

இது தொடர்பாக கள நடுவர்களிடம் மூன்றாவது மற்றும் நான்காவது நாள் ஆட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மைதானத்தில் இருந்து ஆறு பார்வையாளர்களை வெளியேற்றினர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார். மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாக தெரிகிறது. 

“மைதானத்தில் போட்டியை பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் சிலர் சிராஜை தரக்குறைவாக திட்டியுள்ளார். அவர்களது வார்த்தைகள் சிராஜை புண்படுத்தியுள்ளன. பெரிய சைஸ் குரங்கு எனவும் சிராஜை அவர்கள் வசைபாடியுள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டத்தின்போதே நடுவர்களிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தால் தங்களிடம் தெரிவிக்குமாறும் நடுவர்களும் சொல்லியிருந்தனர். அதனால் நான்காவது நாளன்று தன்னை சீண்டிய பார்வையாளர்கள் குறித்து சிராஜ் நடுவர்களிடம் முறையிட்டார். தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை வெளியேற்றிய காவலர்கள் அவர்களை கஸ்டடியிலும் எடுத்துள்ளனர்” என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது.