இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னி மைதானத்தில் தற்போது மூன்றாவது போட்டியில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடரில் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது. சிட்னி போட்டியின் முதல் இன்னிங்ஸில் மட்டுமே மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் அவுட்டாகி உள்ளனர்.
இந்த போட்டியில் நல்ல நிலையில் இருந்த இந்திய அணியை இந்த ரன் அவுட் சாய்த்தது எனவும் சொல்லலாம். ஹனுமா விஹாரி, அஷ்வின் மற்றும் பும்ரா என மூன்று பேர் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன் அவுட்டாகி உள்ளனர். அதுமட்டுமல்லாது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்த ரஹானேவும், முதல் டெஸ்ட் போட்டியில் கோலியும் ரன் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தை 12 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் அவுட்டாகியுள்ளனர். கடந்த முறை 2008இல் மொஹாலியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் ஷேவாக், லக்ஷ்மண் மற்றும் யுவராஜ் ரன் அவுட்டாகி உள்ளனர். அதே போல ஒட்டுமொத்தமாக மூன்று பேட்ஸ்மேன்கள் ஒரு ஆட்டத்தில் ரன் அவுட்டாவது இந்தியாவிற்கு இது ஏழாவது முறை. இதற்கு முந்தையை ஆறு போட்டிகளிலும் இந்தியா வென்றதில்லை.
“ரன் எடுத்தாக வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்படி நடந்தால் அது பேட்ஸ்மேனின் தவறு. அதை மன்னிக்கவும் முடியாது. ஏனெனில் இதில் எந்த காட்டயமும் இல்லை” என சொல்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.