டூட்டி சந்த்
டூட்டி சந்த் PTI
விளையாட்டு

டூட்டி சந்த்துக்கு 4 ஆண்டுகள் தடை: விருதுகளும் தகுதி நீக்கம்!

Prakash J

100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ள டூட்டி சந்த், ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறி மேற்கொண்டு அவர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கடந்த ஜனவரி மாதம் இடைக்கால தடை விதித்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் வேண்டுமென்றே ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என்பதை அவர் நிரூபிக்க தவறிவிட்டதாகவும், இதனால் தற்போது 4 ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வந்த நிலையில், மாதிரி சேகரிப்பு காலத்தில் அவர் பெற்ற பரிசுகள், விருதுகள் அனைத்தும் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டன. தன் இன்ஸ்டா பக்கத்தில் அவர் ‘யாரும் உங்கள் கண்ணீரையோ வலியையோ பார்க்க மாட்டார்கள்; ஆனால் தவறை மட்டும் பார்ப்பார்கள்’ என்றுள்ளார்.

டூட்டி சந்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேற்கொண்டு அவர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் பார்த் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: “டூட்டி சந்த் தடகள விளையாட்டில் சிறந்த வீரர் மட்டுமல்ல, குற்றமற்றவராகவும் உள்ளார். அவர் மீதான தடை தற்செயலானது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்து தடையை நீக்க முயற்சிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.