விளையாட்டு

ஆஸி தொடரில் மீண்டும் ஒருமுறை கெத்து காட்டிய ஜடேஜா

ஆஸி தொடரில் மீண்டும் ஒருமுறை கெத்து காட்டிய ஜடேஜா

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தல் ஆல் ரவுண்டர் என ரவீந்திர ஜடேஜாவை சொல்லலாம். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வித கிரிக்கெட் பார்மெட்டிலும் கலக்கலாக விளையாடுபவர். பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என ஜடேஜா கில்லி. அதை அவர் பலமுறை நிரூபித்தும் உள்ளார். ஆஸ்திரேலிய அணியுடனான சிட்னி டெஸ்டிலும் அதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார் அவர். 

இந்திய பந்து வீச்சாளர்களின் பந்தை கூலாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தை கட்டம் கட்டி ரன் அவுட் செய்துள்ளார் ஜடேஜா. ஸ்மித் 226 பந்துகளில் 131 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜாவின் கையிலிருந்து, துப்பாக்கியிலிருந்து வெளியாகும் தோட்டாவை விட வேகமாக அந்த டைரக்ட் ஹிட் வந்திருந்தது. 

ஃபீல்டிங் மட்டுமல்லாது பவுலிங்கிலும் சூப்பராக அசத்தியிருந்தார் ஜடேஜா. லபுஷேன், மேத்யூ வேட், கம்மின்ஸ் மற்றும் நாதன் லயனை சாய்த்திருந்தார் ஜடேஜா. 18 ஓவர்கள் வீசிய அவர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

மெல்பேர்ன் டெஸ்டில் பேட்ஸ்மேனாக கேப்டன் ரஹானேவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு அரை சதமும் அவர் கடந்திருந்தார். சிறப்பான ஃபீல்டர், பேட்ஸ்மேன், பவுலர் என இந்திய அணியின் சூப்பர் பவர் ஆல் ரவுண்டர் என ஜடேஜாவை சொல்லலாம்.