வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 322 ரன்கள் சேஸ் செய்து வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அபாரமாக விளையாடி சதமடித்தனர்.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணி தரப்பில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்தப் போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் கலீலுக்கு பதிலாக, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
Read Also -> இந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் ?
கடந்தப் போட்டியில் விராத் கோலி அடித்த சதம் சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 60-வது சதமாகும். ஒருநாள் போட்டியில் 36, டெஸ்ட் போட்டியில் 24 சதம் அடித்துள்ளார். மேலும், 60 சதங்களை மிகவும் விரைவாக எட்டிய வீரர் எனும் பெருமையை கோலி படைத்தார். ஏறக்குறைய 386 இன்னிங்ஸில் கோலி இந்தசாதனையை செய்திருக்கிறார்.
சச்சின் 424 இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.