இந்திய அணி எக்ஸ் தளம்
விளையாட்டு

பந்துவீச்சிலும் மிரட்டல்.. 97 ரன்னில் சுருண்ட ENG - 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

Prakash J

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. அதன்படி, முதல் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்றது.

இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களம் புகுந்தனர். அபிஷேக் சர்மா நிலைத்து நின்று, அதிரடியாய் விளையாட மற்ற வீரர்கள் பெவிலியன் திரும்பியவண்ணம் இருந்தனர்.

அபிஷேக் சர்மா

மைதானத்தில் வாணவேடிக்கை நிகழ்த்திய அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்ஸருடன் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருசில சாதனைகளையும் படைத்தார். டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரரானார் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார்.

மேலும், சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார். முன்னதாக, டி20யில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை மைதானத்தில், டி20களின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது.

பின்னர், 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் சால்ட் மட்டும் அதிரடி காட்டினார். அவர், 23 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் மூலம் 55 ரன்கள் எடுத்தார். என்றாலும் அவரைப்போல மற்ற வீரர்கள் எவரும் விளையாடாததால் அவ்வணியின் தோல்வி உறுதியானது. அதற்கு தகுந்தமாதிரி பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் மிரட்டினர்.

ஷமி, திலக் வர்மா

இதனால் அந்த அணி 10.3 ஓவர்களிலேயே 10 விக்கெட்களையும் இழந்து பரிதாப தோல்வியைச் சந்தித்தது. அது, 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்களையும், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.