44 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மகளிர் ஹாக்கி அணி சீனாவை 1-0 என தோற்கடித்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது. இந்த சாதனை இந்தியாவுக்கு 2028 ஒலிம்பிக்கில் நேரடி தகுதியை பெற்றுத்தந்தது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடந்துவருகிறது. டோக்கியோ சென்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து அசத்தி வருவதோடு தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையை 16ஆக உயர்த்தியுள்ளது. தற்போதுவரை இந்தியா மொத்தம் 76 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 16 தங்கம், 25 வெள்ளி மற்றும் 35 வெண்கலம் அடங்கும்.
இந்தசூழலில் மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் சீனாவை 1-0 என தோற்கடித்த இந்திய மகளிர் அணி 44 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று சாதித்தது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் சலீமா அபாயகரமான பகுதிக்குள் ஒரு அற்புதமான பாஸைத் துல்லியமாக அனுப்பினார். அதை லாவகமாக லால்ரெம்சியாமியிடம் தள்ளிய சாக்ஷி கோல் அடிக்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தார். சீனாவின் தடுப்புகளை மீறி ஒரு அற்புதமான கோலை அடித்த லால்ரெம்சியாமி இந்தியாவை 44 ஆண்டுகால கண்ணீர் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து 1-0 என ஸ்கோரை உயர்த்தினார். இறுதிவரை கோலடிக்க போராடிய சீனாவிற்கு இந்தியாவின் கோல்கீப்பர் சவிதா சிம்மசொப்பனமாக விளங்கினார்.
கடைசியாக இந்தியா மகளிர் ஹாக்கி தங்கப் பதக்கத்தை 1982-ல் ஒரே ஒரு முறை மட்டுமே வென்றிருந்தது. அதன்பிறகு இரண்டு முறை அப்பட்டத்தை மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பை நெருங்கியுள்ளது. 1998 மற்றும் 2018-ல் தென் கொரியா மற்றும் ஜப்பானிடம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து, இரண்டாம் இடத்தையே பிடித்தது. இந்தசூழலில் 44 ஆண்டுக்கு பிறகு இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி, அந்த நீண்ட காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது இந்தியா.
பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்று அசத்தியுள்ளது.