விளையாட்டு

கேட்ச் பிடிக்கும்போது காயமடைந்த சஞ்சு சாம்சன்! 2வது டி20-ல் விளையாடுவதில் சந்தேகம்?

சங்கீதா

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பீல்டிங்கின்போது ஏற்பட்ட காயம் காரணமாக, இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக, தசூன் சனாக்கா தலைமையிலான இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், முதல் டி20 போட்டி நேற்றிரவு மும்பை வான்கடை மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, போராடி 160 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்தாண்டு துவக்கத்திலேயே தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி நாளை இரவு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக இந்திய அணி மும்பையில் இருந்து அங்கு சென்றுள்ள நிலையில் அவர்களுடன் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்டருமான சஞ்சு சாம்சன் செல்லவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக மும்பையிலேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நேற்றிரவு நடைபெற்ற போட்டியின்போது, இரண்டாவது இன்னிங்சின் முதல் ஓவரில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வீசிய 2-வது பந்தை இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா தூக்கியடிக்க, அப்போது மிட் ஆஃப் இல் பீல்டிங் செய்துக்கொண்டிருந்த சஞ்சு சாம்சன், பந்தினை டைவ் செய்து பிடிக்க முயற்சி செய்தார்.

பந்தைப் பிடித்தபோதும், மைதானத்தில் கீழே விழுந்த அவரால் தொடர்ந்து பந்தை பிடிக்க முடியாமல் நழுவிச் சென்றது. எனினும் தொடர்ந்து பீல்டிங் செய்த நிலையில், போட்டி முடிந்தப் பிறகு அவரது முழங்காலில் அதிக வீக்கம் காணப்பட்டது. இதனால் மருத்தவப் பரிசோதனைக்கு பின்பே அவரது உடல்நிலை குறித்து தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சஞ்சு சாம்சன் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும், கடந்த போட்டியில் 6 பந்துகளை சந்தித்து 5 ரன்களே சஞ்சு சாம்சன் எடுத்திருந்தது விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சஞ்சு சாம்சன் விலகினால், அவருக்குப் பதிலாக ராகுல் திரிபாதியை அறிமுகம் செய்து வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.