விளையாட்டு

‘ஒவ்வொரு முறை அஸ்வினை பார்க்கும்போதும்..’-புகழ்ந்து பேசிய ரோகித்

‘ஒவ்வொரு முறை அஸ்வினை பார்க்கும்போதும்..’-புகழ்ந்து பேசிய ரோகித்

JustinDurai

''எனது பார்வையில் அஸ்வின் எல்லா காலத்திலும் சிறந்த வீரர்'' எனக் கூறியுள்ளார் ரோகித் சர்மா.

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் அஸ்வின் 435-வது விக்கெட்டை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் புதிய சாதனை படைத்தார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 434 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் இருந்தனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், கபில் தேவ் சாதனையை முறியடித்தார். இந்த ஆட்டத்தில் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் இதுவரை மொத்தம் 436 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் ஆட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில்  பேசிய ரோகித் சர்மா, ''போட்டி 3 நாட்களுக்குள் முடியும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இதற்கு காரணம், எங்கள் பந்து வீச்சாளர்களின் சிறந்த செயல்பாடு தான். அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த சாதனையை அடைந்திருப்பது மிகப் பெரிய விஷயம். அஸ்வினை நீண்ட நாள்களாகப் பார்த்து வருகிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவர் முன்னேற்றம் கண்டு வருகிறார். நிறைய வருடங்களாக அணிக்காக விளையாடி வருகிறார். வெற்றிக்கான ஆட்டங்கள் நிறைய விளையாடியுள்ளார். எனது பார்வையில் அஸ்வின் எல்லா காலத்திலும் சிறந்த வீரர்'' என்றார்.

இதையும் படிக்க: கபில்தேவின் சாதனையை முறியடித்த அஸ்வின்! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்