விளையாட்டு

இஷான் கிஷன் அதிரடி சரவெடி: இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கை எட்டுமா இலங்கை?

இஷான் கிஷன் அதிரடி சரவெடி: இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கை எட்டுமா இலங்கை?

சங்கீதா

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், ரோகித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால், இலங்கை வெற்றிப்பெற 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லக்னோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கினர். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, அண்மையில் நடந்து முடிந்த டி20 தொடரில் சுமாராக விளையாடிய இஷான் கிஷன், இன்றையப் போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார். இதில் 30 பந்துகளில் அரைசதமடித்த அவர், தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.

மற்றொரு முனையில் தன் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, 32 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது லாகிரு குமாரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்பு இஷானுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன், சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜனித் லியானாஜ் பந்துவீச்சில், தசுன் ஷனகாவின் கேட்சில், தனது விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்பு ஸ்ரேயாஸ் மெல்ல அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கினார். இதில் 25 பந்துகளில் அரை சதத்தை கடந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது இந்தியா. இதில், இறுதிவரை 28 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த ஆட்டமிழக்காமல் இருந்தார் ஸ்ரேயாஸ். இந்நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை வெற்றிப்பெற 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.