விளையாட்டு

இலங்கை அணி எளிதில் வெற்றி: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி

இலங்கை அணி எளிதில் வெற்றி: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி

rajakannan

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி எளிதாக வெற்றி பெற்றது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மகேந்திர சிங் தோனி மட்டும் தனி ஆளாக நின்று போராடினார்.

இருப்பினும், இந்திய அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தோனி 65 ரன்கள் குவித்து இறுதியில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி சார்பில் அசத்தலாக பந்து வீசிய லக்மால் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரது வேகத்தில் இந்திய அணியின் டாப் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிந்துவிட்டனர்.

இதனையடுத்து 113 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 19 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் தரங்கா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 46 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த தரங்கா பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, மேத்யூஸ் நிதானமாக விளையாட விக்கெட் கீப்பர் டிக்வில்லா அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 20.4 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் (25), டிக்வில்லா (26) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில், ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடி தோல்வியை தழுவியது. இதனால், கோலி இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்பதை இந்தப் போட்டி உறுதி செய்துவிட்டது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து 12 ஒருநாள் போட்டிகளில் தோல்விகளை கண்ட இலங்கை அணிக்கு இந்த வெற்றி மிகவும் உற்சாகத்தை தந்துள்ளது.