முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடரில் இந்தியா - இலங்கை இடையிலான முதல் ஆட்டம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆட்டத்தின் முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா டக் ஆக, அடுத்து வந்த ரெய்னாவும் 1 ரன்னில் நடையை கட்டினார். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் ஸ்கோர் உயர்ந்தது.
இந்தியாவின் ஸ்கோர் 12.4 ஓவரில் 104 ரன்னாக இருக்கும்போது மணிஷ் பாண்டே 35 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ரிஷப் நிதானமாக ஆடினார். 49 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சர்களுடன் 90 ரன்கள் எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார். இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 6 பந்தில் 13 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இலங்கை அணியில், குணதிலகா(19), மெண்டீஸ்(11), சண்டிமால்(14), தரங்கா(17) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும், குசல் பெராரா தனிஆளாக இந்திய வீரர்களின் பந்துகளை அடித்து நொறுக்கினார். அவர் 37 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், இலங்கை அணி 18.3 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். தாக்கூர் 3.3 ஓவர்களில் 42, உனட்கட் 3 ஓவர்களில் 35 ரன்கள் வாரி வழங்கினர். இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து 7 போட்டிகளில் பெற்ற தோல்விக்கு இலங்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.