விளையாட்டு

முந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..! அடுத்து ரிக்கி பாண்டிங்தான்..!

webteam

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, புனேவில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 295 பந்துகளை எதிர்கொண்ட கோலி இரட்டை சதம் அடித்து அமர்க்களப்படுத்தினார். இது அவர், பதிவுசெய்த 7-ஆவது சர்வதேச இரட்டைச் சதமாக அமைந்தது. இதன் மூலம் 6 இரட்டைச் சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரின் சாதனையை கோலி முறியடித்தார்.

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனது முந்தைய தனிநபர் அதிகபட்ச ஸ்கோரான 243-ஐ கடந்து 254 சேர்த்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்களுக்கும் மேல் ரன் குவித்த கேப்டன் என்ற சிறப்புக்கும் கோலி சொந்தக்காரராக உள்ளார். ஜாம்பவான் வீரர் டான் பிராட்மேன் 8 முறை 150 ரன்களுக்கு மேல் ‌சேர்த்த சாதனையை முறியடித்தும் உள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி குறித்து விராட் கோலி பேசியபோது, “அணியின் கேப்டன் என்ற பொறுப்பின் அடிப்படையில் ரன்கள் குவித்தேன். எனது எண்ணம் எப்போதும் அணியின் ஸ்கோரை அதிகப்பட்சமாக உயர்த்த வேண்டும் என்றே இருக்கும். அடுத்த போட்டியிலும் நாங்கள் சிறு ஓய்வு எண்ணம் கூட இல்லாமல், இதற்கு முன்னர் விளையாடியது போன்றே சிறப்பாக விளையாடுவோம். 3-0 என்ற கணக்கில் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். எனவே லேசாக விளையாடமாட்டோம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என உறுதியாக தெரிவித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி, நாளை ராஞ்சியில் துவங்குகிறது. இந்தப்போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி புது சாதனையை எட்டவுள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சதம் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் அரங்கில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவார்.

ஏற்கெனவே டெஸ்ட் அரங்கில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் 19 சதங்கள் அடித்து இரண்டாவது இடத்தில் இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி சமன் செய்துள்ளார். 3-வது டெஸ்டில் விராட் கோலி ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவார். 

இந்த பட்டியலில் 25 சதங்களுடன் முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் முதலிடத்திலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் 19 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆலன் பார்டர் ஆகியோர் 15 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 14 சதங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இதனால் 3-வது டெஸ்டில் விராட் கோலியின் சதத்தை எதிர்பார்த்தவாறு அவரது ரசிகர் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், கிரிக்கெட்டில் சாதனை படைத்து வந்த சாதனையாளர்களின் பட்டியலை தகர்த்து அடுத்தடுத்து முன்னேறி வருவதால் விராட்கோலியின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.