விளையாட்டு

தென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் அபார சதம்!

webteam

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் டீன் எல்கர் சதமடித்தார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 
முதலி களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ரோகித் 176 ரன்களும் மயங்க் அகர்வால், 215 ரன்களும் குவித்தனர்.

பின்னர் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மார்க்ரம் 5 ரன்களிலும் தியுனிஸ் டி புருயின் 4 ரன்களிலும் அஸ்வின் சுழலில் வீழ்ந்தனர். அடுத்து வந்த டேன் பீடிட் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் போல்ட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்க அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்திலேயே பவுமா (18) விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. அடுத்து கேப்டன் டுபிளிசிஸ், தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கருடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அரைசதம் அடித்திருந்த டுபிளிசிசை, அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். அவர் 55 எடுத்து பெவிலி யன் திரும்பினார். பின்னர் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக், எல்கருடன் இணைந்து ஆடினார். பொறுமையாக ஆடிய எல்கர், அபார சதம் அடித்தார். இதற்காக அவர் 175 பந்துகளை எதிர்கொண்டார். இது அவருக்கு 12 வது டெஸ்ட் சதம் ஆகும்.

டிரிங்ஸ் இடைவேளை வரை அந்த அணி, 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்துள்ளது. எல்கர் 116 ரன்களுடனும் டி காக் 38 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்