விளையாட்டு

இந்திய பவுலர்களை பொளந்த டாம் லாதம் -நியூசிலாந்து அதிரடி வெற்றி!

Rishan Vengai

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 போட்டிகளில் பங்கேற்று 1-0 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபெற்று விளையாடுகிறது.

இன்று தொடங்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி ஓபனர்களான கேப்டன் ஷிகர் தவன் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டையே இழக்காமல் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். ஷிகர் தவன் - சுப்மன் கில் இருவரும் அரைசதம் அடித்து அசத்த, விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது இந்திய அணி.

முதல் விக்கெட்டையே எடுக்க முடியாமல் தடுமாறிய நியூசிலாந்து அணிக்கு 24 ஆவது ஓவரில் சுப்மன் கில்லை அவுட் எடுத்து முதல் விக்கெட்டை தேடித்தந்தார் லாக்கி பெர்குஸன். 50 ரன்கள் எடுத்து சுப்மன் கில் வெளியேற, நல்ல தொடக்கத்தை கொடுத்த ஷிகர் தவான் அடுத்த ஓவரிலேயே 72 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் சதமடிப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் 80 ரன்களில் சவுத்தி வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். பின்னர் இறுதியாக களத்திற்கு வந்த வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் 3 பவுண்டரிகள், 3சிக்சர்கள் விளாசி 16 பந்துகளில் 37 ரன்கள் சேர்க்க இந்திய அணிகளை 300 ரன்களை கடந்து, 50 ஓவர் முடிவில் 306 ரன்கள் சேர்த்தது.

307 ரன்கள் என்ற இலக்கை துறத்திய நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே ஓபனர் பின் ஆலன் விக்கெட்டாகி வெளியேற, சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவர் முடிவில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி. பின்னர் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்ட்னர்ஷிப் போட நியூசிலாந்து அணி சீரான விகிதத்தில் ரன்களை சேர்க்க ஆரம்பித்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்த, பின்னர் அதிரடியான ஆட்டத்திற்கு திரும்பிய டாம் லாதம் ஷர்துல் தாக்குர் வீசிய 40ஆவது ஓவரில் 1 சிக்சர், 4 பவுண்டரிகள் விளாசி ஒரே ஓவரில் 25 ரன்களை அடித்து 76 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து தனது சர்வதேச 6ஆவது சதத்தை அடித்து மிரட்டினார். பின்னர் ஆட்டத்தை விரைவாக முடிக்க நினைத்த லாதம் பவுண்டரி சிக்சர்களாக விளாச இந்திய அணிக்கு எதிராக 4ஆவது விக்கெட்டுக்கு 208* ரன்கள் சேர்த்து அதிகபட்ச பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.

பின்னர் 47.1 ஓவரில் இலக்கை அடைந்த நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ரன்கள் அடித்து 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 145 ரன்களுடன் டாம் லாதம் மற்றும் 94 ரன்களுடன் வில்லியம்சன் இருவரும் இறுதிவரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.