விளையாட்டு

கோலியை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை - புவனேஷ்வர் குமார்

கோலியை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை - புவனேஷ்வர் குமார்

rajakannan

இந்திய அணி எல்லா நேரங்களிலும் கேப்டன் விராட் கோலியை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை என்று வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார். 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், ஹாமில்டனில் இன்று 4வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ரன்னில் ஆட்டமிழந்தது. நியூசிலாந்து வீரர் பவுல்ட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 14.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணிக்கு இதுமிகப்பெரிய தோல்வி ஆகும். கேப்டன் விராட் கோலி, தோனி இல்லாத நிலையில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.

போட்டிக்கு பின்னர் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பேசுகையில், “இதுபோன்ற போட்டிகள் எப்பொழுதாவது ஒருமுறை அமையும். சில மாதங்களாக கவனித்தால், நாம் சிறப்பான ஆட்டங்களை விளையாடியுள்ளோம். இந்தப் போட்டி நம்மை சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எதிர் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆய்வதற்கும், பாடங்களை கற்றுக் கொள்வதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இது மிடில் ஆர்டருக்கான கடைசி வாய்ப்பு இல்லை. பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. மிடில் ஆர்டருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இது நல்ல பாடமாக அமைந்துவிட்டது. அவர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசினார்கள்” என்று கூறினார்.

விராட் கோலி போட்டியில் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு, “அவரைப் போன்ற வீரரை மிஸ் பண்ணுவீர்கள். அதேவேளையில், அவரது இடத்தில் இறங்கும் இளம் வீரர்களுக்கு அது ஒரு வாய்ப்பு. நாங்கள் கோலியை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை” என்றார் புவனேஷ்வர்குமார்.

இன்றையப் போட்டியில் கேதர் ஜாதவ், ராயுடு, தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் தங்களது திறமையை நிரூபிக்க தவறிவிட்டனர். அதேபோல், புதுமுக வீரர் ஒருவர் மூன்றாவது இடத்தில் களமிறக்கப்படுவது அரிது. ஆனால், இன்றைய வாய்ப்பு அவருக்கு சரியாக அமையவில்லை. இருப்பினும், இதுமுதல் போட்டி என்பதால், அடுத்தடுத்து சில போட்டிகளில் அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தலாம்.