விளையாட்டு

பயிற்சி ஆட்டம் - விக்கெட்கள் இழந்து திணறும் இந்திய வீரர்கள்

பயிற்சி ஆட்டம் - விக்கெட்கள் இழந்து திணறும் இந்திய வீரர்கள்

rajakannan

இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் கவண்டி அணியுடனான போட்டியில் இந்திய வீரர்கள் விக்கெட்களை இழந்து திணறி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக எஸ்ஸெக்ஸ் கவண்டி அணியுடனான நான்கு நாள் போட்டி இன்று தொடங்கியது. முதல் ஓவரிலேயே இந்திய அணி ஷிகர் தவானின் விக்கெட்டை பறிகொடுத்தது. தான் சந்தித்த முதல் பந்திலே கொலீஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். தவான் அவுட் ஆன அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஆட்டத்தின் 3வது ஓவரில் புஜாரா ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். இந்திய அணி 5 ரன்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 

பின்னர் முரளி விஜய் உடன், ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ஆனால், இந்தப் போராட்டமும் சிறிது நேரம் தான் நீடித்தது. 17(47) ரன் எடுத்த நிலையில், ரகானே ஆட்டமிழந்தார். மூன்று விக்கெட்டுகளுமே விக்கெட் கீப்பிங்கிடம் கேட்ச் தான்.

முரளி விஜய் உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். விராட் கோலி களமிறங்கிய போது இந்திய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. விராட் கோலி தொடக்கம் முதலே பவுண்டரிகள் அடித்து ரன்களை சேர்ந்தார். விராட் கோலியின் இந்த ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. 28 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. விராட் 34 பந்துகளில் 32 ரன், முரளி விஜய் 80 பந்துகளில் 45 ரன் எடுத்து விளையாடி வருகின்றனர்.