நடப்பு உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
மிகுந்த பரபரப்புக்கு நடுவே இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 337 ரன்கள் குவித்துள்ளது. பேர்ஸ்டோவ் 111, ஸ்டோக்ஸ் 79, ராய் 66 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட் சாய்த்தார்.
இதனையடுத்து, 338 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 9 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி சிறப்பாக விளையாடியது. விராட் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடி 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் 32 எடுத்து வெளியேறினார். இந்திய அணி 42 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
ரோகித் சர்மாவுக்கு நடப்பு உலகக் கோப்பை தொடரில் இது மூன்றாவது சதம் ஆகும். ஏற்கனவே தென்னாப்ரிக்கா (122*), பாகிஸ்தான் (140) அணிகளுக்கு எதிரான சதம் விளாசி இருந்தார். ஒட்டு மொத்தமாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 25 ஆவது சதம். கங்குலிக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா ஒரே உலகக் கோப்பையில் மூன்று சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.