விளையாட்டு

தோனி சாதிக்காததை கோலி சாதிப்பாரா ? இன்று முதல் டெஸ்ட்

தோனி சாதிக்காததை கோலி சாதிப்பாரா ? இன்று முதல் டெஸ்ட்

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் எட்பாஸ்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்திய அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டு தோனி தலைமையில் 3-1 என்ற கணக்கிலும், 2011 ஆம் ஆண்டில் 4-0 என்ற கணக்கிலும் டெஸ்ட் தொடரை இழந்தது. ஆனால் அதற்கு முன்பாக 2007 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.

கோலி தலைமையில் முதல் முதலாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இருப்பதால், தோனி சாதிக்காததை கோலி சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. மேலும் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணியிவும் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவிலான வெற்றிகளை பெறவில்லை. அந்த அணி பாகிஸ்தான், மே.தீவுகளிடம் தோற்றுள்ளது. மேலும், இன்றைய டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும். அதற்கு ஐசிசி வாழ்த்தும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட், பேர்ஸ்டோவ், அலிஸ்டர் குக், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் பலம். இந்தியாவை பொறுத்தவரை கோலி, இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக், உள்பட 7 இதர வீரர்களும் கடைசியாக நடந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். 

இந்திய அணியின் பவுலிங்கை பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கிலாந்துக்கு எதிராக ஆடும் 11 பேரை சேர்ப்பது இந்திய அணி நிர்வாகத்துக்கு பெரும் சிரமமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும்.