விளையாட்டு

‘சைனா மேன் சுழலுக்கு செக்’ - இங்கிலாந்து வீரர்களின் பிளான் சக்சஸ்

‘சைனா மேன் சுழலுக்கு செக்’ - இங்கிலாந்து வீரர்களின் பிளான் சக்சஸ்

rajakannan

இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்ட திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. 

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி போராடி வெற்றி பெற்றது. கடந்தப் போட்டியில் சவாலாக இருந்த குல்தீப் யாதவின் பந்து வீச்சை சரியாக எதிர் கொண்டதே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது, இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் குல்தீப் யாதவின் 5 விக்கெட்டுகள் தான். 200 ரன்கள் எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குல்தீப் சுழலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் 159 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 

இதனால், இரண்டாவது போட்டியில் குல்தீப் பந்து வீச்சை சமாளிக்க, மெர்லின் என்ற ஸ்பின் பவுலிங் மெஷினை பயன்படுத்தி இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி பெற்றனர். மிகவும் துல்லியமாக பந்துவீசும் இந்த மெஷின், 2005-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இடது மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்க வந்த டெக்னாலஜிதான் இந்த மெர்லின் பவுலிங் மெஷின். ஷேன் வார்ன் பந்துவீசும் ஸ்டைலில் இந்த மெஷின் பந்துவீசியது. ஹென்றி பிரியர் என்பவர் கண்டுபிடித் இந்த மெஷினை, தூசி தட்டி எடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிப் பெற்றனர். 

மெர்லின் மிஷினில் இங்கிலாந்து வீரர்கள் பெற்ற பயிற்சிக்கு இரண்டாவது டி20 போட்டியில்  நல்ல பலன் கிடைத்துள்ளது. கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் சாய்த்த குல்தீப், இந்தப் போட்டியில் விக்கெட்டுகள் எதுவும் எடுக்கவில்லை. 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்தார். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அவரது ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசப்பட்டது. அதுவும் முக்கியமான நேரத்தில் இந்த சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. குல்தீப் வீசிய 17வது ஓவரில் பெர்ஸ்டவ் 2 சிக்ஸர்கள் விளாசினார். அந்த ஓவரில் 16 ரன்கள் அடிக்கப்பட்டன. முதல் 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அவர், கடைசி ஓவரில் ரன்களை வாரி வழங்கிவிட்டார். குல்தீப் ஓவர்களில் விக்கெட் விளாமல் பார்த்துக்கொண்டதே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது. 

வெற்றிக்கு பின்னர் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில், “குல்தீப் சிறந்த பந்து வீச்சாளர். ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் அவர் சிறப்பாக பந்து வீசினார். ஆனால், மைதானத்தின் தன்மை எங்களுக்கு சற்றே சாதகமான இருந்தது. எங்களது திட்டம் மிகவும் சரியாக இருந்தது என்று நினைக்கிறேன். அவரை நாங்கள் சரியாக எதிர் கொண்டோம்” என்றார்.