ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கவாஜா அதிகபட்சமாக 50(76) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 40, ஸ்டோய்னிஸ் 37, கர்ரே 36 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சமி, பும்ரா, குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர்.
இதனையடுத்து, 237 ரன்கள் என்ற குறைவான இலக்கை விரட்டி விளையாடிய இந்திய அணிக்கு, தொடக்கத்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் ஷிகர் தவான். அவரை தொடர்ந்து ரோகித் சர்மா உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அவ்வவ்போது சில பவுண்டரிகளை மட்டும் இருவரும் அடித்தனர்.
ஒரு கட்டத்தில் விராட் பவுண்டரிகளாக விளாசினார். ஆனால், ஜம்பா பந்துவீச்சில் எல்.பி.டபிள்வூ ஆகி ஆட்டமிழந்தார். அவர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்திருந்தார்.
விராட் கோலி ஆட்டமிழந்த சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார். மிகவும் நிதானமாக விளையாடி வந்த ரோகித், 66 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடுவும் 13(19) ரன்னில் நடையை கட்ட இந்திய அணி 100 ரன்களை எட்டுவதற்கு 4 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 32 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்துள்ளது. கேதர் ஜாதவ் 20(31), தோனி 14(30) எடுத்து விளையாடி வருகின்றனர்.