விளையாட்டு

சதம் அடித்து போராடிய ‘தனி ஒருவன்’ ஸ்மித் - ஆஸ்திரேலியா 286 ரன்கள் குவிப்பு

webteam

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 286 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் களமிறங்கிய தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 3 (7) ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, கேப்டன் ஆரோன் ஃபின்ச் 19 (26) ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் அடித்த மார்னஸ் 54 (64) ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து விளையாடிய ஸ்மித், சதம் அடித்து தனி ஒருவனாக போராடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 131 (132) ரன்கள் எடுத்த நிலையில், ஷமி வீசிய பந்தில் ஸ்மித் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதற்கிடையே வந்த கீப்பர் அலெக்ஸ் கரே 35 (36) ரன்கள் எடுத்து வெளியேறினார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.