முதல் சதம் அடிப்பது கடினமானது என்று ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா 104 ரன்கள் குவித்தார். முதல் விக்கெட்டுக்கு கேப்டன் ஆரோன் பின்சுடன் சேர்ந்து அவர் 193 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் கவாஜாவுக்கு இது முதல் சதம் ஆகும்.
இந்நிலையில், தன்னுடைய முதல் சதம் குறித்து கவாஜா கூறுகையில், “இந்தச் சதம் மிகப்பெரியது. முதல் சதம் அடிப்பது என்பது கடினமானது. இந்தச் சதம் சிறப்பான ஒன்றாகும். இதேபோன்றுதான் டெஸ்ட் போட்டிகளிலும் என்னுடைய முதல் சதத்தை அடித்தேன். ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு போட்டியில் 98 ரன்னில் ஆட்டமிழந்தேன். அப்போது மிகவும் வருத்தப்பட்டேன்” என்றார்.
மேலும் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து, “வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. மிகவும் சிறப்பான அணியை போராடி வெற்றி கொள்வது சிறப்பானது. குறிப்பாக அவர்களுடைய மண்ணிலே வெற்றி கொள்வது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டோம். தற்போது மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் நிலைத்து இருக்கிறோம்” என்று கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கவாஜா, 775 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் ஒரு சதம், 6 அரைசதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை 41 போட்டிகளில் விளையாடி 8 சதம், 14 அரைசதத்துடன் 2,765 ரன்கள் எடுத்துள்ளார்.