விளையாட்டு

இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் : ஷ்ரேயஸ் - ஜடேஜா அசத்தல் கூட்டணி; முதல் நாளில் 258 ரன்கள்

EllusamyKarthik

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் கான்பூர் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங் தேர்வு செய்தது. இந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ஷூப்மன் கில் களம் இறங்கினர். மயங்க், 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கில் 52 ரன்களை குவித்து அவுட்டானார். 

கேப்டன் ரஹானே மற்றும் புஜாரா மீண்டும் பெரிய இன்னிங்ஸ் விளையாட தவறிவிட்டனர். இருந்தாலும் அந்த குறையை அறிமுக வீரர் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜடேஜா கூட்டணி போக்கியது. இருவரும் 113 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இந்தியா 145 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த நெருக்கடியான நிலையில் இருந்து அணியை மெதுவாக மீட்டு வந்து 258 ரன்களுடன் முதல் நாள் ஆட்டத்தை முடிவு செய்துள்ளனர் இருவரும். 

ஷ்ரேயஸ், 75 ரன்கள் எடுத்துள்ளார். ஜடேஜா, 50 ரன்கள் எடுத்துள்ளார். ஜடேஜா விளையாடிய கடைசி ஐந்து டெஸ்ட் இன்னிங்ஸில் 4 முறை அரை சதம் பதிவு (இந்த இன்னிங்ஸ் உட்பட) செய்துள்ளார். இருவரும் விக்கெட்டை இழக்காமல் இருப்பது இந்திய அணிக்கு சாதகம். 

இந்தியா நாளை தேநீர் நேரம் வரை விளையாடினால் கூட எப்படியும் 400 ரன்களை எட்ட வாய்ப்புள்ளது. அது நியூசிலாந்து அணி மீது அழுத்தத்தை கொடுக்க உதவும்.