இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெற்று விளையாடிய ஆல் ரவுண்டர் ஜடேஜாவிற்கு மாற்றாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மாற்று வீரராக (CONCUSSION SUBSTITUTE) களம் இறங்கி விளையாடியது பெருத்த சர்ச்சையை கிரிக்கெட் உலகில் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்கள்து கருத்துகளை தெரிவித்துள்ளனர். சிலர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதியில் சிக்கல் இருப்பதாகவும் சொல்லியுள்ளனர்.
ஜடேஜாவுக்கு மாற்றாக சாஹல் ஏன் விளையாடினார்?
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்தது. அதில் இந்திய பேட்ஸ்மேன்கள் சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழக்க இன்னிங்க்ஸை தனி ஒருவராக ஸ்டெடி செய்தார் ஜடேஜா. எதிர்பாராத விதமாக ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்து தலை பகுதியில் அடிப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து சில பந்துகள் விளையாடி இன்னிங்ஸை முடித்தார். ஆனால், இந்திய அணி பீல்டிங் செய்யும் போது அவர் விளையாடவில்லை. ஐசிசியின் விதிப்படி அவருக்கு மாற்றாக பிளெயிங் லெவனில் இடம்பெறாத சாஹல் களம் இறங்கி விளையாடினார்.
ஜடேஜாவுக்கு பதிலாஜ சாஹல் விளையாடியதற்கு ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் சில வீரர்கள் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இருப்பினும் மாற்றுவீரராக களமிறங்கிய சாஹலின் ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. சாஹலை மாற்று வீரராக களம் இறங்க மேட்ச் ரெஃப்ரி டேவிட் பூனும் அனுமதி கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதென்ன CONCUSSION SUBSTITUTE? எப்போது இதை ஐசிசி அறிமுகம் செய்தது?
கிரிக்கெட் விளையாட்டில் வீரர்களுக்கு தலையில் அடிபடுவது அரிதிலும் அரிதான விஷயம். காரணம் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் தான் வீரர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இருப்பினும் சமயங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வது உண்டு. பந்து வீச்சாளர்கள் வீசும் பந்தானது பேட்ஸ்மேன்கள் தலைப்பகுதியை ஹெல்மட்டையும் கடந்து தாக்குவது உண்டு.
அதை மனதில் கொண்டு கடந்த 2019இல் ஒரு வீரர் விளையாடும் போது தலையில் அடிபட்டால் அவருக்கு இணையான (LIKE FOR LIKE REPLACEMENT) மற்றொரு வீரரை களம் இறக்கலாம் என தெரிவித்தது. இது ஆண்கள், பெண்கள் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளுக்கும் செல்லும் என சொல்லி அந்த ஆண்டின் ஆகஸ்ட் முதல் தேதியில் அமல்படுத்தியது.
சர்வதேச போட்டிகளின் போது காயம்பட்ட வீரருக்கு மாற்றாக வேறொரு வீரரை களம் இறக்கும் வாய்ப்பு அணிகளுக்கு இருக்கும் என ஐசிசி தனது விதியில் சொல்லியிருந்தது.
CONCUSSION SUBSTITUTE மூலம் எப்போது அணிகள் மாற்று வீரரை பயன்படுத்தலாம்?
ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள ஒரு வீரருக்கு ஆட்டத்தின் போது தலை பகுதியில் அடிபட்டாலோ அல்லது காயம் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் போதோ மாற்று வீரரை களம் இறக்கலாம். ஆனால் இதற்கு சில கண்டீஷன்களை விதித்துள்ளது ஐசிசி.
ஆட்டத்தின் போது வீரருக்கு காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதுவும் மைதானத்திற்குள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதனை மருத்துவ வல்லுநர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். தொடர்ந்து மாற்று வீரருக்கான தேவை இருந்தால் அணியின் மருத்துவ பிரதிநிதி போட்டியின் ரெஃப்ரியிடம் அதற்கான வேண்டுகோளை முன்வைக்க வேண்டும். அதற்கு ரெஃப்ரி அனுமதிக்க வேண்டும்.
அந்த மாற்று வீரர் சம்மந்தப்பட்ட வீரரை காட்டிலும் கூடுதல் திறன் கொண்ட வீரர் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது தான் ஐசிசி விதியில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் காயம்பட்ட வீரரையும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கும் படி ஐசிசி சொல்லியுள்ளது.
அதன்படியே ஜடேஜாவுக்கு மாற்றாக சாஹல் களம் இறங்கினார். அதே நேரத்தில் ஜடேஜா எஞ்சியுள்ள இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு மாற்றாக அணியில் ஷர்துல் தாக்கூர் இடம்பிடித்துள்ளார்.