ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் நடந்த காலிறுதி போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்து வருகிறது. பிருத்வி ஷா தலைமையிலான இந்திய அணி, காலிறுதி போட்டியில் பங்களாதேஷ் அணியை இன்று எதிர்கொண்டது. குயின்ஸ்டவுணில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான பிருத்வி ஷா, 40 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த சுபம் கில்-லும் (86 ரன்) அபிஷேக் சர்மாவும் (50) அதிரடி காட்ட, இந்திய அணி, 49.2 ஓவர்களில் 265 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 42.1 ஓவரில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்திய அணி, 131 ரன்னில் வெற்றிபெற்றது.
இந்திய தரப்பில் நாகர்கோட்டி 3 விக்கெட்டுகளையும் சிவம் மவி, அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வரும் 30 -ம் தேதி இந்திய அணி எதிர்கொள்கிறது.