2024 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்ட இந்தியா, ஒரு பரபரப்பான சூழலில் கடைசி 5 ஓவரில் வெற்றியை மீட்டெடுத்து 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்தது.
ஹர்திக் பாண்டியா, பும்ரா இருவரும் பந்துவீச்சில் இந்தியாவை மீண்டுகொண்டுவர, சிக்ஸ் லைனில் ஒரு அசாத்தியமான கேட்ச்சை பிடித்த சூர்யகுமார் யாதவ் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். கோப்பை வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் மக்கள் கடலைப்போல திரண்டுவந்து வரவேற்பளித்தனர்.
இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணியால் வெல்லமுடியாத ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை, பிவி சிந்து, த்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் மற்றும் 17 வயதேயான அன்மோல் கர்ப் அடங்கிய இந்திய குழு தங்கம் வென்று நாடு திரும்பியது.
பிவி சிந்து, த்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஆகியோர் சிறப்பாக விளையாடியிருந்த போதிலும், மற்றொரு இந்திய ஜோடி தோல்வியை சந்தித்ததால் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற 17 வயதான அன்மோல் கர்ப் வெற்றிபெறவேண்டியது கட்டாயமானது.
ஆனால் உலகின் 45வது ரேங்கிங் வீரரை எதிர்கொண்ட 472 ரேங்கிங்கான 17 வயதான அன்மோல் கர்ப், தான் ஏன் ஒரு சாம்பியன் என்பதை நிரூபித்துக்காட்டினார். அவரின் அசாத்தியமான ஆட்டத்தால் இறுதிப்போட்டுக்கு முன்னேறிய இந்தியா, அங்கு தாய்லாந்தை 3-2 என முதல்முறையாக தங்கம் வென்று மகுடம் சூடியது. இதற்கு முன் ஆடவர் அணி இரண்டு முறை வெண்கலம் வென்றிருந்தாலும், இந்தியா முதல்முறையாக சாம்பியனாக தங்கத்தை வென்று மகுடம் சூடியது.
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், 124 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
முதலில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியாவிற்காக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
2024-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, முதல்முறையாக இரட்டை பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.
மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய இணை ரோகன்-எப்டன் ஜோடி, இத்தாலியின் சிமோன் பொலேல்லி மற்றும் ஆண்ட்ரியா வவஸ்சோரி ஜோடியை நேர் செட் கணக்கில் வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச்சென்றது.
ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம், 43 வயது 329 நாட்கள் வயதுடைய ரோகன் போபண்ணா ஓபன் சகாப்தத்தில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற மிக அதிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்தார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இரண்டாவது இடம்பிடித்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
டோக்கியோவில் தங்கம், பாரீஸில் வெள்ளி வென்ற நீரஜ், ஒலிம்பிக்ஸ் போட்டியில் அடுத்தடுத்து தங்கம், வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் தன்வசமாக்கியுள்ளார்
2024 உலக மகளிர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தோனேசியா வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இது இவர் பெரும் இரண்டாவது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டமாகும்.
2019-ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்த உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கோனேரு, 2024 பட்டத்தையும் வென்று ஒன்றுக்கு மேற்பட்ட சாம்பியன் பட்டங்களை வெற்றவர்கள் பட்டியலில் சீனாவின் ஜூ வென்ஜுன் சாதனையை சமன்செய்துள்ளார். இந்த இரண்டு வீராங்கனைகள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
2024 பாராலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு பிரிவில் வெண்கலம் வென்ற கைகளற்ற 17 வயது வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, இந்தியாவிற்காக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
உலக வில்வித்தை அமைப்பானது இந்தாண்டின் சிறந்த தருணமாக ஷீத்தல் தேவியின் சாதனையை பதிவுசெய்துள்ளது.
2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்ற இந்தியாவின் அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று, இரண்டு முறை தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை எழுதினார்.
2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் SH1 துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 22 வயதான அவனி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் சக்கர நாற்காலியில் மீண்டும் அதே பிரிவில் தங்கம் வென்று வரலாறு படைத்தார்.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணியினர், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் தங்கம் வென்று முதன்முறையாக வரலாறு படைத்தனர்.
ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் நடைபெற்ற 2024 செஸ் ஒலிம்பியாட் தொடரில், ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, பென்டாலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணியும், திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், ஹரிகா , வைசாலி மற்றும் தனியா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதேயான இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை 14வது சுற்றில் வீழ்த்தி இளம் வயதில் உலக செஸ் சாம்பியான் ஆன முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.