மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணி கறுப்பு பட்டை அணிந்து விளையாடவுள்ளனர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அண்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் அந்த அணியில் ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை. இதனால் 59 ஓவர்களில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாரிய நிலையில் உள்ளது. இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிந்ததால் நாளை இரு அணிகளும் மூன்றாம் ஆட்டத்தில் விளையாடும்.
இதற்கிடையே இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானதற்கு இந்திய அணி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி, எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் நல்ல மனிதரான அருண் ஜெட்லி மறைந்துவிட்டதாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நாளை விளையாடவுள்ள மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி அருண் ஜெட்லிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருண் ஜெட்லி பிசிசிஐ-யின் முன்னாள் துணைத் தலைவராகவும், டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.