இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இந்தியாவில் சுற்றுப்பயணம் கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இந்தியாவிடம் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரையும் இழந்துவிட்டது. இந் நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான 3 வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்றிரவு நடக்கிறது.
கடந்த போட்டியில் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். இன்றைய ஆட்டத்திலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் இந்திய அணியில் உமேஷ் யாதவ், பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், நதீம் போன்ற வீரர்களுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும்.
தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில், ரஸ்செல், கிறிஸ் கெய்ல், லெவிஸ், சுனில் நரேன் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இல்லாததால் தற்போது அந்த அணி பலவீனமாக இருக்கிறது. அதோடு டி20 போட்டியில் மிரட்டும் பொல்லார்ட், ஹெட்மைர் போன்றோர் இந்த தொடரில் விரைவில் அவுட் ஆகிவிடுவதால் அந்த அணியால் வெற்றிக்கு அருகில் நெருங்க முடியவில்லை. இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்று அந்த அணி போராடும். இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.
சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்கள் மிரட்ட வாய்ப்பிருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் முன்னணி வீரர்களான கேப்டன் விராத் கோலி, தோனி ஆகியோர் இல்லாதது ரசிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
வீரர்கள் விவரம்:
தவான், ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ரிஷாப் பன்ட், மனிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், குணால் பாண்ட்யா, சேஹல், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது.
போட்டி, இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.