விளையாட்டு

ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா V/s பங்களாதேஷ் பகலிரவு டெஸ்ட் போட்டி 

webteam

இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபேறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடர் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கங்குலி, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு நல்ல முன்னேற்றம். இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு மிகவும் தேவையான ஒன்று. நானும் எனது குழுவும் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்துவதில் உறுதியாக இருந்தோம். பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட ஒப்புக் கொண்டதற்கு இந்திய கேப்டன் விராட் கோலிக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த இந்தியா சார்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுடன் ஆலோசித்து பதிலளிப்பதாக தெரிவித்திருந்தது. இந்தச் சூழல் தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். பகலிரவு டெஸ்ட் போட்டியில் இளங்சிவப்பு நிற(Pink) பந்து பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.