மும்பையில் நடைபெற்ற இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இன்டர்கான்டினென்டல் சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வந்தது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன. பின்னர் கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதின.
பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அந்த 2 கோல்களையும் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அடித்தார். இந்தத் தொடரில் சுனில் சேத்ரி மொத்தம் 8 கோல்கள் அடித்துள்ளார். இதையடுத்து சர்வதேச போட்டிகளில் அவர் 64 கோல்களை அடித்துள்ளார்.
(சுனில் சேத்ரி)
தற்போது விளையாடி வரும் வீரர்களில் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள மெஸ்ஸியின் சாதனையை சேத்ரி சமன் செய்தார். இந்தப்பட்டியலில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 81 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றதை அடுத்து, பாராட்டுகள் குவிந்துவருகிறது. இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உட்பட பலர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.