விளையாட்டு

மிரட்டிய இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள்: 108 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலிய ஏ அணி!

EllusamyKarthik

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றிய நிலையில் வரும் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக உள்ளது. அதற்கு இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் விளையாடி வருகிறது. முதல் பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்த நிலையில் இன்று ஆரம்பமான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலிய ஏ அணியும் விளையாடி வருகின்றன. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பும்ரா 55 ரன்களும், சுப்மண் கில் 43 ரன்களும், பிருத்வி ஷா 40 ரன்களும் இந்தியாவுக்காக எடுத்திருந்தனர். 48.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களை எடுத்தது இந்தியா. தொடர்ந்து ஆஸ்திரேலிய ஏ தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 32.2 ஓவர் விளையாடி 10 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை அந்த அணி எடுத்தது. அதோடு 86 ரன்களும் பின் தங்கியுள்ளது. ஷமி (3), பும்ரா (2), சிராஜ் (1), சைனி (3) மாதிரியான பவுலர்களும் விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இந்த ஆட்டத்தில் மேலும் இரண்டு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இப்போதைக்கு இந்தியாவின் கை உயர்ந்துள்ளது.