சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரநிலையில் இந்திய அணி முதலிடத்தில் தொடர்கிறது.
இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வென்றது. கேப்டவுன் நகரில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்தன. தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு சுருண்டது. ஷமி, பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 208 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியினரின் அனல் வேகப்பந்துவீச்சில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அஷ்வின் 37 ரன்கள் எடுத்தார். பிலாண்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் தோற்றாலும் இந்திய அணி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் 124 மதீப்பிட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி 111 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஷஸ் தொடரில் பெற்ற வெற்றியை அடுத்து 104 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சர்வேதச டெஸ்ட் தரநிலையில் நியூசிலாந்து அணி நான்காவது இடத்திலும், இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.