வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றியை நெருங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதலாவது டெஸ்டில் இந்திய அணி, 318 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.
2 வது டெஸ்ட் போட்டி, ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்தது. ஹனுமா விஹாரி 111 ரன்கள் எடுத்தார். மயங்க் அகர்வால் 55, விராத் கோலி 76, இஷாந்த் சர்மா 57 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பும்ரா ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷமி 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா, இஷாந்த் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு பாலோ-ஆனை வழங்காமல் 299 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. கே.எல்.ராகுல் 6 ரன்களிலும் மயங்க் அகர்வால் 4 ரன்களிலும் கெமர் ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா 27 ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் விராத் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்ட மிழக்க, ரஹானேவும் விஹாரியும் நிலைத்து நின்று ஆடினர். அணியின் ஸ்கோர், 4 விக்கெட்டுக்கு 168 ரன்களாக இருந்த நிலையில் டிக்ளர் செய்யப்பட்டது. ரஹானே 64 ரன்களுடனும் விஹாரி 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக் கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 423 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் நடக்கிறது.