விளையாட்டு

’5000மீ.. 13:25.65 நிமிடங்கள்’.. 30 வருடகால சாதனையை முறியடித்த இந்திய தடகள வீரர்

’5000மீ.. 13:25.65 நிமிடங்கள்’.. 30 வருடகால சாதனையை முறியடித்த இந்திய தடகள வீரர்

JustinDurai

இந்திய தடகள வீரர் அவினாஷ் சேபிள், அமெரிக்காவில் நடந்த தடகள போட்டியில் பங்கேற்று 30 வருடகால சாதனையை முறியடித்து சாதனை படைத்து உள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நேற்றிரவு நடந்த 30 வயது ஆண்களுக்கான 5,000 மீட்டர் தூர தடகள போட்டியில் இந்திய தடகள நட்சத்திர வீரர் அவினாஷ் சேபிள் கலந்து கொண்டார். அவர் பந்தய தொலைவை 13:25.65 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்தார்.

இப்போட்டியில் அவினாஷ் சேபிள் 12வது இடத்தைப் பிடித்திருந்தாலும் தடகள போட்டியில் அவர் 30 வருடகால சாதனை ஒன்றை முறியடித்து உள்ளார். கடந்த 1992-ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த பகதூர் பிரசாத் 5,000 மீட்டர் இலக்கை 13:29.70 நிமிடங்களில் அடைந்து இருந்ததே சாதனையாக இருந்தது. அதற்கு பின்னர் இந்திய வீரர்கள் யாரும் இதனை முறியடிக்கவில்லை. இந்நிலையில், 30 வருடங்களுக்குப் பின்னர் அவினாஷ் சேபிள் இந்த சாதனையை முறியடித்து சாதனை படைத்து இருக்கிறார். இந்த போட்டியில் நார்வே தடகள வீரர் ஜாகோப் இங்க்ப்ரிக்ட்சன் 13:02.03 நிமிடங்களில் முதல் வீரராக இலக்கை எட்டி வெற்றி பெற்றார்.

இதற்கு முன் கேரளாவில் நடந்த மூத்த தடகள ஃபெடரேசன் கோப்பை சாம்பியன்ஷிப் 5,000 மீட்டர் ஓட்ட போட்டியில் அவினாஷ் சேபிள் 13:29.70 நிமிடங்களில் இலக்கை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரவிருக்கிற சர்வதேசப் போட்டிகளுக்காக அவினாஷ் அமெரிக்காவிலேயே பயிற்சி பெற்று வருகிறார்.

இதையும் படிக்கலாம்: சச்சின் 200 ரன்களை கடந்த பிறகு முல்தான் டெஸ்டை டிக்ளேர் செய்திருக்கலாம் - யுவராஜ் சிங்!