ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “டோக்யோவில் புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது, இன்றைய சாதனை என்றும் நினைவில் இருக்கும்” என தெரிவித்தார்
இது தொடர்பாக வாழ்த்து தெரிவித்திருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், “ தடைகளை தகர்த்து நீரஜ் சோப்ரா வரலாறு படைத்துள்ளதாக” தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா. இந்தியாவின் 120 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் ஒரு பில்லியன் இதயங்களில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் உண்மையிலேயே ஒரு நேஷனல் ஹீரோ” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற இறுதிசுற்றில் நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த நிலையில், இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார், மூன்றாவது சுற்றில் 76.79 மீட்டர் தூரத்துக்கும் எறிந்தார். இரண்டாவது சுற்றில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார் நீரஜ்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவு போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது நீரஜ் சோப்ரா, தனது முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரம் எறிந்து, முதல் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.