விளையாட்டு

முதல் டி 20: இந்திய அணி வெற்றி

முதல் டி 20: இந்திய அணி வெற்றி

webteam

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. முதலாவது போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்றிரவு நடந்தது.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராத் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தடைபட்டது. அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 30 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாஹல், பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

பின்னர் டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி, இந்திய அணி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். அதிரடியில் ஈடுபட்ட ரோகித்தை கவுல்டர் நைல் போல்டாக்கினார். பின்னர், நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றது. விராத் கோலி, 14 பந்துகளில் 22 ரன்களுடனும் தவான் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி வரும் 10 ஆம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது.