இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக எஸ்ஸெக்ஸ் கவண்டி அணியுடனான நான்கு நாள் போட்டி இன்று தொடங்குகிறது. ஆனால் இங்கிலாந்தில் நிலவும் அதிகப்படியான வெப்பம் காரணமாக ஆட்டத்தை மூன்று நாள்களாக குறைக்க இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய அணி நேற்று செம்ஸ்போர்ட் மைதானத்தில் இந்திய அணியினர் பயிற்சி மேற்கொள்ள சென்றபோதுதான் இங்கிலாந்தில் நிலவும் அனல் காற்றை உணர்ந்தனர். மேலும் ஆடுகளமும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதையெல்லாம் பார்த்த இந்திய அணியின் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் அணி நிர்வாகம் கலந்தாலோசித்து 4 நாள்கள் ஆட்டத்தை 3 நாள்களாக குறைத்துவிட்டது.
ஆனால் இதுதொடர்பாக அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. எனினும் துணை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் பிட்ச் நிலவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பயிற்சி ஆட்டம் என்பதால் இந்திய அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. வீரர்கள் இந்த பயிற்சி ஆட்டத்தால் காயம் அடையாமல் இருக்க வேண்டும் என்பதால் ஆடுகளம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சீரமைக்க இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து நடவடிக்கை எடுக்க ஒத்துக்கொண்ட மைதான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மைதானத்தை சீர்படுத்தி வருகிறது. நான்கு நாள் ஆட்டத்துக்கும் டிக்கெட் விற்கப்பட்டுள்ளதால், இப்போது நான்காவது நாள் ஆட்டத்தில் டிக்கெட் பணத்தை திரும்பித்தர மைதான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்திய பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, சமி ஆகியோர் நீண்ட நேரம் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ஷிகர் தவன், கேஎல். ராகுல் ஆகியோர் சாஸ்திரி, கோலியிடம் ஆலோசனைகளை பெற்று பேட்டிங் பயிற்சி செய்தனர். மைதானம் பயிற்சிக்கு தோதாக இல்லாததால் இந்திய அணியினர் குறைவான நேரமே பயிற்சியை மேற்கொண்டனர்.