Anurag Thakur
Anurag Thakur web
விளையாட்டு

Asian Games 2023: அருணாச்சல் வீராங்கனைகளுக்கு அனுமதி மறுத்ததா சீனா? மத்திய அமைச்சரின் பயணம் ரத்து!

Rishan Vengai

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளானது சீனாவின் ஹாங்சூவில் நடைபெறவிருக்கிறது. செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகள், ஆசிய கண்டத்தின் சிறந்த வீரர்களை அடையாளம் காணும் ஒன்றாக நடத்தப்படுகிறது. சில போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதியே தொடங்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வமான போட்டிகள் நாளை சனிக்கிழமை தொடங்கி அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.

Indian Wushu Players

இந்நிலையில் தான் போட்டியில் பங்கேற்க செல்லவிருந்த இந்திய வீராங்கனைகள் மூன்று பேருக்கு சீனா அனுமதி மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த உஷூ (wushu) வீரர்களான நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு முதலிய 3 வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையை கண்டித்திருக்கும் இந்தியா, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் சீன பயணத்தை ரத்து செய்துள்ளது.

சீனாவின் பாகுபாடான, நெறியற்ற நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு! - அரிந்தம் பக்சி

சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து பேசியிருக்கும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, சீனாவின் இந்த பாகுபாடான நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்காமல் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “சீனா இந்த நடவடிக்கை காரணமாக அதிகபட்சமான பாரபட்சத்தை காட்டியிருக்கிறது. குடியிருப்பு அல்லது இனத்தின் அடிப்படையில் இந்தியக் குடிமக்களை வித்தியாசமாக நடத்துவதை இந்தியா உறுதியாக நிராகரிக்கிறது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனா வேண்டுமென்றே செய்திருக்கும் இதுபோன்ற நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்திருக்கும் இந்திய அரசு, இது தொடர்பாக தலைநகர் டெல்லி மற்றும் சீனாவின் பெய்ஜிங்கில் இருக்கக்கூடிய தூதரகத்தில் எதிர்ப்பு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய வீரர்களுக்கு ஏற்கனவே விசா வழங்கப்பட்டது! - OCA நெறிமுறைக் குழு தலைவர்

இந்திய வீரர்களுக்கு அனுமதி மறுத்திருக்கும் சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் நெறிமுறைக்குழு தலைவர் வெய் ஜிஜோங் இந்திய வீரர்களுக்கு முறையாக விசா வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Asian Games 2023

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “இந்திய விளையாட்டு வீரர்கள் சீனாவுக்குள் நுழைவதற்கான விசாவை ஏற்கனவே பெற்றுள்ளனர். சீனா எந்த விசாவையும் மறுக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, இந்த விளையாட்டு வீரர்கள் தான் விசாவை ஏற்காமல் இருந்துள்ளனர். இது OCA-ன் பிரச்சனை என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் தகுதிச்சான்றிதழ் இருக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் சீனாவுக்கு சென்று விளையாடுவதற்கான ஒப்பந்தத்தை சீனா செய்துள்ளது. தகுதியுடைய அனைத்து வீரர்களும் சீனாவிற்கு வந்து விளையாடட்டும். இதில் எந்த குழப்பமும் இல்லை, தெளிவாக உள்ளது. மேலும் விசா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.