விளையாட்டு

“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்

“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்

webteam

ஆஸ்திரேலியா தொடரை இந்திய அணி இழந்தது ஒருவகையில் நல்லதுதான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி 2-0 என்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. அதன்பிறகு நடைபெற்ற அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய அணி படுதோல்வியடைந்து தொடரை இழந்தது. இத் தொடர் உலகக் கோப்பைக்கு முன் இந்தியா விளையாடிய கடைசி தொடர் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இதில் இந்திய அணி தோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட் ஆஸ்திரேலிய தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்தது ஒரு வகையில் நல்லதுதான். ஏனென்றால் இது உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவும்.மேலும் இத்தொடருக்கு முன் இந்திய அணி உலகக் கோப்பையை எளிதில் வென்றுவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்தச் சூழலில் இத்தோல்வி இந்திய அணி உலகக் கோப்பையில் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் விளையாட வேண்டும் என்று அறிவுறித்தியுள்ளது. 

இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகிறது. அதனால் இந்தத் தோல்வி ஒரு விழித்துகொள்ள வேண்டிய எச்சரிக்கையாகதான் பார்க்கவேண்டும். என்னை பொருத்தவரை உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது. அத்துடன் இந்தாண்டு உலகக் கோப்பை மிகவும் போட்டி நிறைந்த ஒன்றாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.