உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் ஷர்மா முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பாகிஸ்தான் அணியில் ஷாகின் ஷா அஃப்ரிதி முதல் ஓவரை வீசினார்.
முதல் இரண்டு பந்துகளில் தடுப்பாட்டம் ஆடிய கே.எல்.ராகுல் மூன்றாவது பந்தில் ஒரு ரன் அடித்தார். பின்னர் நான்காவது பந்தினை எதிர்கொண்டார் ரோகித். அந்த பந்தினை யார்க்கராக வீசினார் அஃப்ரிடி. அந்த பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார் ரோகித். பின்னர் கேப்டன் விராட் கோலி களத்திற்கு வந்தார். முதல் ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு ஒரு விக்கெட்டும் பறிபோனது.
இதனையடுத்து, இமாத் வசிம் இரண்டாவது ஓவரை வீசி நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். பின்னர் மீண்டும் அடுத்த ஓவரை வீசிய அஃப்ரிடி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். முதல் பந்திலேயே கே.எல்.ராகுலை க்ளீன் போல்ட் ஆக்கினார். இந்திய அணி 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஹசன் அலி வீசிய 6வது ஓவரின் நான்காவது பந்தில் சூர்ய குமார் யாதவும் 11 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.
இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை: சர்வதேச அணிகளின் ரன் குவிப்பு மந்தமாக இருக்க ஆடுகளம் காரணமா?-ஓர் அலசல்