இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தப் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றிப்பெற்றது. இதனால் 1-1 என்ற கணக்கில் இப்போது தொடர் சம நிலையில் இருக்கிறது. இந்நிலையில் இன்றையப் போட்டியில், வெற்றியில் யார் முந்துவது என்ற நோக்கில் பரபரபப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்தப் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட இளம் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் குவித்து அசத்தினார். முதல் போட்டியில் ‘டக்-அவுட்’ ஆகி அதிர்ச்சி அளித்த கேப்டன் விராட்கோலி 49 பந்துகளில் 73 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிப்பெற வைத்தார். இந்தியாவை பொறுத்தவரை இரு ஆட்டங்களிலும் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடவில்லை.
இதனால் இன்றையப் போட்டியில் இஷான் கிஷனுடன், ரோகித் சர்மா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பேட்டிங்கில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது எனத் தெரிகிறது. இந்தப் போட்டியில் வேகப் பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டனுக்கு பதிலாக வுட்ஸ் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.