விளையாட்டு

மும்பை டெஸ்ட்: ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை!

jagadeesh

மும்பையில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா தனது 2 ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்து 332 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் இடக்கை சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் அபாரமாக பந்துவீசி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா தரப்பில் மயாங்க் அகர்வால் 150 ரன்களை குவித்து அசத்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் திறன்படைத்த வேகப்பந்தையும், சுழற்பந்துவீச்சையும் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 2 விக்கெட்டையும், ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட நியூசிலாந்து அணி 263 ரன்கள் பின் தங்கியிருந்தாலும் இந்தியா "பாலோ ஆன்" கொடுக்காமல் பேட்டிங் செய்ய களமிறங்கியது. காயம் காரணமாக சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. இதனையடுத்து புஜாராவும், மயாங்க் அகர்வாலும் களமிறங்கி மிகப் பிரமாதமாக விளையாடினர். இந்நிலையில் ஆட்டநேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்த இந்தியா நியூசிலாந்தை காட்டிலும் 332 ரன்கள் முன்னிலைப்பெற்றுள்ளது. மயாங்க் அகர்வால் 38 ரன்களும், புஜாரா 29 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர்.